சமீபகாலமாக ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திரையுலகப் பிரபலங்களின் முகங்களை ஆபாச வீடியோக்களில் பொருத்தி (Deepfake) வெளியிடும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் எனப் பல நடிகைகள் இதற்குப் பலியான நிலையில், தற்போது தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை சுனைனாவும் இந்த மோசடிக்கு ஆளாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் தனது போலி ஆபாச வீடியோ குறித்து நடிகை சுனைனா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இது ஒரு அருவருப்பான செயல்!” – சுனைனா வேதனை
சுனைனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது முகத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மாற்றி வீடியோ உருவாக்கி, சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பரப்பி வருவது எனது கவனத்துக்கு வந்துள்ளது. இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது, கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் எனது கண்ணியம், தனியுரிமை மற்றும் அடையாளத்தை மீறும் செயலாகும். இது அப்பட்டமான பாலியல் துன்புறுத்தலாகவும், அவதூறாகவும் கருதப்படுவதுடன், இந்தியச் சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பகிர்பவர்கள் மீது பாயும் சட்ட நடவடிக்கை!
மேலும் இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். “இந்த வீடியோவை உருவாக்கியவர்கள், வெளியிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதை வேடிக்கைக்காகப் பகிர்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும். ஆகவே இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குவதையும், பகிர்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கெனவே பதிவிட்டவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் தளங்களிலிருந்தும் அதை உடனடியாக நீக்க வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.
ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்குக் கோரிக்கை!
இறுதியாகத் தனது நலன் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். “பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும், இணையத்தில் எங்கு இதைக் கண்டாலும் உடனடியாக ‘ரிப்போர்ட்’ (Report) செய்து புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என சுனைனா தெரிவித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

