தமிழ் சினிமாவில், தனக்கெனத் தனித்த இசைப் பாதையில் கோடி அருவிகளின் சங்கமமாய்த் திகழ்பவர் ஷான் ரோல்டன்.
`தலைகோதும்’ மெல்லிசையால், `வெண்பனி’ குரலால் தமிழ் இதயங்களில் நங்கூரமிட்டவர். ஓர் இசைமைப்பாளராக, பாடகராக, பிரபல எழுத்தாளர் சாண்டில்யனின் பேரனாக ஷான் ரோல்டனைப் பலருக்கும் தெரியும். ஒரு மகனாக எப்படிப்பட்டவர் என ஷான் ரோல்டனின் அம்மாவும் சாண்டில்யனின் மகளுமான பாடகி பத்மா சாண்டில்யன் கூறியதாவது, “என்னோட ஒரே புள்ள ஷான் ரோல்டன் எனக்கு நண்பனும்கூட! எங்கிட்ட எதையுமே மறைக்கமாட்டான். அவங்கிட்ட புடிச்ச விஷயமே அந்த வெளிப்படைத் தன்மைதான். என் அப்பா சாண்டில்யனோட குணம், ஜாடை அப்படியே அவங்கிட்ட இருக்கு. அப்பாவைப் போலவே ஒரு வேலையைக் கையில எடுத்தா அதை முடிக்காம விடமாட்டான். சோம்பேறித்தனம் என்ற வார்த்தை சாண்டில்யன் அகராதியிலும் கிடையாது, என் செல்ல மகன் ஷானு அகராதியிலும் கிடையாது.

மெல்லிசை வளர்ந்த விதம்
ஷான் பிறந்தப்போ எங்க இஷ்ட தெய்வத்தை மனசுல வெச்சு ராகவேந்திரான்னு பேரு வெச்சோம். ராகவேந்திராங்குற பேரைச் சுருக்கி எல்லோரும் ஆர்.ஆர்னு கூப்பிடுவோம். அவன், இசைத்துறைக்கு வந்தபிறகு தாத்தாவோட சாண்டில்யன் பேரு வரணும்னு ஷான் ரோல்டன்னு பேரை மாற்றிக்கிட்டான். தனுஷ் சார்கூட நல்ல நட்பு உண்டு. நான், உடம்பு சரியில்லாம இருந்தப்போ பார்த்துட்டுப் போனார். அவரும் ரொம்ப அன்பான புள்ள!


ஷானு படிப்பிலும் கெட்டி. ரொம்ப நல்லா படிக்கிற பையன்னு நாராயணா மிஷன் ஸ்கூல் டீச்சர்ஸ் பாராட்டுவாங்க. பத்தாவது, ப்ளஸ் டூல ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்தான். விஸ்காம் படிப்புல கோல்டு மெடலும் வாங்கினான். அதுக்காக புத்தகப்புழுவெல்லாம் கிடையாது. எப்பவும் கிரிக்கெட் விளையாடுவான். `கவலைப்படாதம்மா… நான் படிச்சிடுவேன்மா!’ன்னு சொல்லி அவனே படிச்சிடுவான். பெத்த வங்களுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கப்போகுது?
நணபர்களுக்கு உதவி:-
ஸ்கூல்ல கவிதை, கட்டுரைகளும் எழுதுவான். எங்கப்பாவோட மறு உருவமாச்சே, அதுகூட இல்லாம இருக்குமா? அதைவிட முக்கியமானது அவன் மட்டும் படிச்சா போதும்னு சுயநலமா இருக்கமாட்டான். ஃப்ரெண்ட்ஸுங்களுக்கும் சொல்லிக்கொடுத்து அவங்களையும் மார்க் எடுக்கவெச்சு அழகு பார்ப்பான்.
இசைக் குடும்பம்
இசைக் குடும்பம்ங்கிறதால சின்ன வயசிலிருந்தே நல்லா பாடுவான். அவனோட முதல் குரு நான்தான். 18 வயசு வரைக்கும் எங்கிட்டேதான் சங்கீதம் கத்துக்கிட்டான். சின்ன வயசுல நிறைய பக்திப் பாடல்களை கம்போஸ் பண்ணி ராகம் போட்டுப் பாடுவான். குழந்தையா இருக்கும்போது போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டான். மும்பையில எம்.பி.ஏ படிச்சான். கேம்பஸ் இன்டர்வியூல பெரிய சம்பளத்துக்கு செலக்ட் ஆனான். இசையில அவனுக்கு ஆர்வம் இருந்ததால இசைத்துறைக்கே வந்துட்டான். இசைத்துறையில அவனோட குருன்னா சஞ்சய் சுப்ரமணியன்தான். பெரிய மேதை. அவர் மேல குரு பக்தி அதிகம்.
பட வாய்ப்பு:-
சந்தோஷ் நாராயணன் சாருக்கும் ஷானுக்கும் நல்ல நட்பு. அவர்தான் ‘எங்கூடவே வந்து பாடு!’ன்னு சொன்னார். ஷானுக்கு முதலில் ரிலீஸ் ‘வாயை மூடி பேசவும்’ படம். ஆனா, முதன்முதலா ஷானு இசையமைச்ச படம் `முண்டாசுப்பட்டி’தான். சந்தோஷ் நாராயணன் சார்கிட்ட ‘முண்டாசுப்பட்டி’ படத்துக்கு இசையமைக்க ராம்குமார் கேட்டுக்கிட்டார். அப்போ அவர்தான் ஷானுவை, ‘ரொம்ப இன்டெலிஜென்ட், நல்லா பண்ணிக் கொடுப்பார்’னு சொல்லி அறிமுகப்படுத்தியிருக்கார். அவன் இசையமைச்ச ‘ஜோக்கர்’ படத்துக்கு தேசிய விருது கிடைச்சதுல, எங்களுக்கெல்லாம் அப்படியொரு பெருமிதம்.
அவன் இசையமைச்சதுக்காக அவனுக்கு தேசிய விருது கிடைக்கணும்னா `ஜெய் பீம்’ படத்துக்காகக் கிடைச்சிருக்கணும். ரொம்ப உணர்வுபூர்வமா அந்த மக்களோட வலிகளைப் புரிஞ்சிக்கிட்டு இசையிலும் குரலிலும் வெளிப்படுத்தியிருப்பான்.
திரைத்துறையில மகன் இசையமைப்பாளரா அறிமுகமாகி பத்து வருடங்கள் நிறைவடைஞ்சிருக்கு. ஒவ்வொரு படத்தையும் முதல் படமா நினைச்சு அப்படியொரு உழைப்பைக் கொட்டுது என் புள்ள. எல்லோருமே அவனைப் பாராட்டுறப்போ நெகிழ்ச்சியில அழுதிடுவேன். கடவுளும் அப்பாவும் எனக்குக் கொடுத்த வரம் என் மகன்!” என்றார் இசையமைப்பாளர்ஷானின் அம்மா பத்மா.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here