இணைந்த கைகள் படம் வந்து 35 வருடங்கள் ஆகின்றன. 90-ல் வெளிவந்த பிரம்மாண்டமான ஆக்ஷன் படம். இன்று இந்தப் படத்தைப் பார்க்கும் போது லாஜிக் மிஸ்டேக்ஸ், கண்டினியுட்டி மிஸ்டேக்ஸ் எல்லாம் கண்ணுக்குத் தெரிந்தாலும், படத்தின் லொகேஷன்கள் நம்மை கட்டிப் போடும். படம் முழுவதும் ட்ராவல் தான். நகர்ந்து கொண்டே இருக்கும்.
இணைந்த கைகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது “அந்தி நேரத் தென்றல் காற்று” பாடல் தான். இன்று வரை சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. ஆனால் அனதப் படத்தின் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். பெரும்பாலும் சின்ன சின்ன பாடல்கள் தான். ஒருபக்கம் அருண்பாண்டியன்- நிரோஷா ஜோடி காதலிக, இன்னொரு பக்கம் வேறொரு ஜோடி பாடி ஆடும். “உரைச்ச மஞ்சளை பூசட்டா” பாடலை படத்தின் தயாரிப்பாளர் ஆபாவாணனே பாடியிருக்கிறார். 3 நிமிடத்திற்குள் முடிந்து விடும் இந்தப் பாடல் காட்சி வடிவில் டிவியில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பாடல் முழுவதும் அருண்பாண்டியனும் நிரோஷாவும் கட்டி உருள்வார்கள் என்பதால், டிவியில் போடமாட்டார்கள். எவ்வளவு அப்பாவியா இருந்திருக்கோம் பாருங்க.


நிரோஷாவுக்கு இந்த ஒரு பாடல் தான். மற்றதெல்லாம் மாண்டேஜ் பாடல்கள். படத்தின் இன்னொரு நாயகியான சிந்துவுக்கு தான் ஏகப்பட்ட பாடல்கள். இத்தனைக்கும் ராம்கி-நிரோஷா காதல் பற்றி கிசுகிசு இருக்கும் போதே ஜோடியை மாற்றிப் போட்டிருக்கிறார் ஆபாவாணன். செம்ம குசும்பு.
ராம்கி கொள்ளையடிக்கும் போது வரும் பாடல் “கங்கைக்கரையில் அடியவர் கூட்டம்” மலேசியா வாசுதேவன் பாடியது. இந்தப் பாடலும் நன்றாக இருக்கும்.
ஆபாவாணன் அறிமுகப்படுத்திய மனோஜ்-கியான் இரட்டையர்கள் தமிழில் தொடர்ச்சியாக படம் செய்தார்கள். இருவரும் பிரிந்த பிறகு கியான் வர்மா தனியாக இசையமைத்த படம் தான் இது. இருவரும் இணைந்து பல அட்டகாசமான பாடல்களை கொடுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு மற்றொரு ஹீரோயின் சிந்துவின் அறிமுகப்பாடல் “மெல்ல மெல்ல இரவு வந்தது” 90களிலேயே 2பீஸ் நீச்சல் உடையில் நடித்தவர் சிந்து. அதுவும் அப்போதே சைஸ் ஜீரோ ஹீரோயின். ஆனாலும் அதன் பிறகு பெரிய வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது.
ராம்கியும், அருண்பாண்டியனும் ஒரு இடத்தில் மாட்டிக் கொள்ள, அங்கே ஒரு குரூப் சாங். “சின்னப் பூவே சின்னப்பூவே கோபம் கொள்ளாதே” தீபன் சக்ரவர்த்தி, வித்யா இணை பாடியது.
மனோஜ் – கியான், கியான் வர்மா பாடல்களின் ஸ்பெஷாலிட்டியே பிரம்மாண்டமான ஆர்கெஸ்ட்ரா தான். ஏகப்பட்ட வாத்தியங்களை வைத்து வித்தை காட்டிவிடுவார்கள்.
ராம்கி- சிந்து இணைக்கு இன்னும்2 பாடல்களை கொடுத்திருப்பார்கள். “இது என்ன முதல் இரவா” பாடலில் சிந்துவுக்கு நீச்சல் உடை என்றால், ராம்கிக்கும் ஜாக்கி ஜட்டி தான் உடை. ராம்கினா சும்மாவா.. இந்தப் பாடலின் சரணத்தைக் கேட்டால், அப்படியே சில ஆண்டுகள் பயணித்து “என்றென்று காதல்” படப்பாடலில் வந்து முடியும். மனோஜ் தான் அதற்கும் இசை.
ஒரு டேங்கர் லாரியில் பயணம் செய்யும் போது வரும் மாண்டேஜ் பாடல் தான் “மலையோர குயில் கூவ கேட்டேன்” இங்கும் ஆர்கஸ்ட்ரா தான் பிரதானம்.
அதற்குப் பிறகு அனைவருக்கும் தெரிந்த “அந்தி நேர தென்றல் காற்று”.
நடிகர் சார்லி ஆடிப்பாடும் பாடல் “ஆடி மாசம் பொறந்துருச்சு”. கங்கை அமரன் பாடியிருக்கும் இந்தப் பாடல் அட்டகாசமான ஃபோக் சாங்.
படத்தின் இயக்குனர் & ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன். லொகேஷன்களும், கேமரா ஆங்கிள்களும் அள்ளும். படத்தின் பிரம்மாண்டமான பின்னணி இசையை மறக்கவே முடியாது. அதுவும் இண்டர்வெல் காட்சியில் எல்லாம் சில்லறைகளை சிதற விட்டது ஒரு காலம்.
இன்றளவும் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இண்டர்வெல் பிளாக் என்று லிஸ்ட் எடுத்தால் இணைந்த கைகள் படமும் அதில் இருக்கும். அட்டகாசமாக இருக்கும். அதுவும் 70ம்ம் ஸ்கிரீனில் பார்க்கும் போது தான் அதன் பிரம்மாண்டம் புரியும்.
அதே சமயம் படத்தின் பின்னணி இசை முழுவதுமே அட்டக்காப்பி.. 1975-ல் வெளிவந்த “BreakHeart Pass” எனும் ஆங்கிலப்படத்தில் இருந்து அப்படியே உருவியிருப்பார்கள். படத்தின் மொத்த பின்னணி இசையும் அந்த தீம் மியூசிக் தான்.
இன்றைக்கும் ஒரு ஆல்பமாக கேட்டால் ரசிக்க வைக்கும்.
இணைந்த கைகள் 80’ஸ், 90’ஸ் கிட்ஸ் மறக்க முடியாத படம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here