ஹீரோவாக நகுல் நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் வாஸ்கோடகாமா, இந்த படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி ரிலீசாக போகிறது. இன்று பிரசாத் லேப் திரையரங்கில் இந்த ‘ வாஸ்கோடகாமா ‘ படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் K. S ரவிகுமார் மற்றும் நடிகை தேவயானி இருவரும் பங்கேற்றார்கள்.
இந்த விழாவில் நடிகை தேவயானி பேசும் போது,
“எனது வாழ்த்துக்களை முதலில் தயாரிப்பாளருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பாடல்களையும் இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் பார்த்தேன். அழகாக, சுறுசுறுப்பாக, நல்ல எண்டெர்டைன்மென்ட் அம்சத்துடன் அமைந்திருக்கின்றன. என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் பங்கேற்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.அவனை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
அவனுக்கும் எனக்கும் நல்ல அன்பான உறவு இருக்கிறது. எங்கள் வீட்டுக் குட்டிப் பையன் நகுல். எனக்கு அவன் சின்னத்தம்பி.அவனிடம் பல திறமைகள் இருக்கிறது. நானும் அவனுக்கு ஒரு விசிறி தான்.பாய்ஸ் திரைப்படத்திற்கு பின் அவனுடைய காதலில் விழுந்தேன் படத்தைப் பார்த்த போது அவனுக்குள் உண்டான மாற்றம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நல்ல திறமையான நடிகன் நகுல். தன்னுடைய தோளில் முழுப் படத்தையும் தாங்கி சுமப்பவன். அவன் நடிப்பதற்கு ஒரு நல்ல கதை வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும்.ஒரு நல்ல கதையுடன், ஒரு நல்ல இயக்குநருக்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.எல்லாருக்கும் ஒரு நல்ல காலம் வரும் என்று சொல்வார்கள். அவன் அந்த நல்ல காலத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன்.
அவன் எனது தம்பி என்பதற்காக இதை சொல்லவில்லை .அவன் நல்ல திறமைசாலி. அவன் நல்ல நடிகன் மட்டுமில்லை, நன்றாக ஆடுவான், நன்றாகப் பாடுவான்; இசை அமைப்பான். தன்னைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகமாக வைத்திருப்பான்..
அது போல உள்ள ஒரு தம்பியும் அக்காவும் இந்த சினிமாவில் இருப்பதே அபூர்வம். இது போல வேறு எங்கே இருக்கிறது?
அவனுக்கு நான் உறவில் அக்கா என்றாலும் வயதில் சிறியவனாக இருப்பதால் அவனை நான் என் பிள்ளையை போல் பார்த்துக் கொள்வேன்.இன்றும் அவனுக்கு நான் அம்மாதான்.சிறு வயதிலிருந்து துறுதுறுவென்று இருப்பான். அவன் நல்ல திறமைசாலி. அவன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் பட விழாவில் அக்காவாக நான் பங்கேற்று கொள்வது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இதை என்னால் நம்ப கூட முடியவில்லை. இப்படிபட்ட வாய்ப்பு எத்தனைப் பேருக்கு கிடைக்கும்? எந்த அக்காவுக்கு தான் கிடைக்கும்?
இன்று எங்களோடு என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.அவர்கள் நான் இங்கே இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களுடைய ஆசீர்வாதம் இங்கே நிரம்பி உள்ளதாக நினைக்கிறேன்.இங்கு நடப்பது ஒவ்வொன்றும் அவர்களிடம் சென்று அடையும்.அவனுக்கு எப்போதும் ஆதரவாக இருந்த அவர்கள் இப்போதும் ஆதரவாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அவனைச் சூழ்ந்து கொண்டிருந்த இருந்த கரிய புகைமேகங்கள் விலகி போனது. அவனுக்கு இனிமேல் நல்ல காலம் தான். இனி நீ நல்ல நல்ல படங்களை பண்ண வேண்டும். நகுல் நீ எதற்கும் கவலைப்படாதே.அவனுக்கு மற்றவர்கள் ஆதரவு கொடுங்கள் “என்று சொல்லி வாழ்த்தினார் .
விழாவில் இயக்குநர் K.S. எஸ் ரவிக்குமார் பேசும்போது,
“இந்த படத்தின் தயாரிப்பாளர் பெயர் சுபாஸ்கரன் மற்றும் எடிட்டர் பெயர் தமிழ்குமரன். இந்த பெயர்கள் எனக்கு லைகாவை ஞாபகப்படுத்துகின்றன. அந்த லைகா நிறுவனத்தை போல் இவர்களும் வளர வேண்டும். பல படங்களை தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இப்படத்தை படத்தை இயக்கியுள்ள ஆர்.ஜி கே தன்னம்பிக்கை கொண்ட இளைஞன். ‘எ பிலிம் பை ஆர்ஜிகே ‘என்று போடும்போது யாராவது எதையாவது சொல்வார்களோ என்று எண்ணாமல் தைரியமாகப் போட்ட அந்தத் துணிச்சலை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
அவர் என்னிடம் வாஸ்கோடகாமா கதையினை சொல்லும் போது நல்லவர்கள் அனைவரும் ஜெயிலில் இருக்கிறார்கள், கெட்டவர்கள் அனைவரும் வெளியில் இருக்கிறார்கள் இது போன்ற ஒரு கதை என்றார். அதுவே எனக்குப் பிடித்து போனது.
அவரிடம் எப்போதும் ஒரு தேடல் இருந்து கொண்டேயிருக்கும்.
ஷூட்டிங்கில் அவர் அப்படித்தான் தனக்குத் தேவையானவற்றை சமரசம் இல்லாமல் பெற்றுக் கொள்வார். ஒருவனுக்கு இதுபோல நம்பிக்கைதான் வெற்றியைத் தேடித் தரும்” என்று வாழ்த்து கூறினார்.
இயக்குநர் அறிவழகன் பேசும்போது,
”ஒரு படத்தில் இயக்குநர் பணி செய்யும் போது தயாரிப்பாளரின் பட்ஜெட்டின் சூழலுக்கு தகுந்தவாறு தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம். சரியான பட்ஜெட் இருக்கா வசதிகள் இருக்கா என்பதை பற்றி எல்லாம் பார்ப்பதை காட்டிலும் இந்த அடாப்டேஷன் முக்கியம்.
K.S.ரவிகுமாரின் இணை இயக்குநரிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது படையப்பா வில் அந்த ஊஞ்சல் காட்சி படமாக்கப்பட்ட விதத்தை சொன்னார். மாலை 3 மணிக்கு அப்போது அவ்வளவு பெரிய காட்சி எடுக்க முடியாத அளவுக்கு சூழல் இருந்த போதிலும் அந்த நேரத்தில் ஆன்த ஸ்பாட் முடிவு பண்ணி இயக்குநர் அந்த சீனை எடுத்தது பற்றி அவர் சொன்னார். படத்தின் கதையின் ஆன்மாவை கொண்டு செல்வது தான் ஒரு இயக்குநருக்கு முக்கியம். அதுதான் வெற்றிக்கு வழி செய்யும்.
அதேபோல எந்த ஒரு படத்திற்கும் டெக்னீஷன்கள் மனதார இதயபூர்வமாக அந்த படத்திற்காக உழைக்க வேண்டும். அது மாதிரி இந்தப் படத்திற்கு நடந்துள்ளது.
நான் அந்த பாய்ஸ் படக் குழு இங்கே இருப்பதாக உணர்கிறேன். ஒரு ஆற்றல் மிக்க நடிகர் நகுல். சினிமாவில் ஏற்ற இறக்கம் இழுபறி இதுபோன்ற நிலைமை சகஜம். அதையும் கடந்து வெற்றி பெறுவது தான் முக்கியம்” என்று கூறினார்.

இயக்குநர் RGK பேசும் போது ,
” சினிமாவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ரஜினி ஒருவர் மட்டும் தான். நான் சினிமாவை அவர் மூலம் தான் கற்றுக் கொண்டேன். நன்றி தலைவா !
இந்தப் படத்தில் ஒரு நாற்பது வயது குழந்தை நகுலை நான் நடிக்க வைத்து உள்ளேன் . இந்தப் படத்தில் 44 நடிகர்களை நடிக்க செய்து 41 நாட்களில் படத்தை முடித்திருக்கிறேன். குறிப்பிட்ட பட்ஜெட்டில்,சொன்னது போல குறிப்பிட்ட நாளில் இந்த படத்தை எடுத்து முடித்தோம்.இந்தப் படத்தில் நாங்கள் எடுக்க நினைத்ததை எடுத்துள்ளோம். நிச்சயம் அது உங்களுக்குப் பிடிக்கும்.
இந்த படம் நல்ல என்டர்டெய்னராக இருக்கும். வேண்டாம் என்று தோன்றிய பல ஸீன்களை பாரபட்சம் பார்க்காமல் எடுத்து விட்டோம்.கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம் என்று வைக்காமல் தூக்கி இருக்கிறோம். படம் பார்ப்பவர்களின் உணர்வுகள் தான் எங்களுக்கு முக்கியம். இதை உணர்ந்து சரியானபடி எடுத்திருக்கிறோம் என்று நினைக்கிறோம். படத்தைப் பார்த்தும் உள்ளது உள்ளவாறு எழுதுங்கள் .நன்றாக இருக்கிறது என்றால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள். நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று எழுதுங்கள்” என்று கூறினார்.
ஹீரோ நகுல் பேசும் போது,
“முதலில் இங்கு வந்த எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நட்பு வட்டம் சிறியது. ஆனால் அவர்களுக்கு என்றும் நான் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் முன்பெல்லாம் நான் புலம்புவதுண்டு. வாழ்க்கை இப்படிதான் போகுமா என்று.
எனது வாழ்க்கை எங்கே ஆரம்பித்து எங்கே செல்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போனது. மும்பையில் பள்ளியில் படித்து கொண்டிருந்த போது அக்கா இங்கே நடிக்க வந்து விட்டார். அவருக்காக, அவர் கூப்பிட்டதால் இங்கு வந்து விட்டோம். நான் முதலில் பைலட் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு,அதற்காக முயன்றேன் . பிறகு விஸ்காம் சேர்ந்தேன். அதுவும் ஒரு லவ்வுக்காக மாறினேன். அதுவும் நிறைவேறல பிறகு ராணுவத்தில் சேர விருப்பப்பட்டேன் .அதற்காகஎன் உடல் எடையை குறைத்தேன்.அதுவும் நடக்கல .
ஏதோ ஒரு அதிர்ஷ்டம், ஏதோ ஒரு ஆசீர்வாதம் கிடைத்துள்ளதால் இங்கு வந்து சேர்ந்து விட்டேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தின் காரணமாகத்தான் பாய்ஸ் படத்தில் நடிக்க வந்தேன். பிறகு காதலில் விழுந்தேன் படம் வந்தது. நான் ஒன்று நினைத்தால் எல்லோரும் மற்றொன்றை என்னிடம் ரசித்தார்கள். நான் பாடலாம் என்றால் அவர்கள் எல்லோரும் நகுல் நன்றாக ஆடுகிறார் என்கிறார்கள்.
படத்தில் நான் எனது சண்டைக்காட்சிகள் இருந்தபோது பயந்தேன். ஆனால் என் நடனத்தை அவர்கள் ரசித்தார்கள். பல தடைகள் தாமதங்கள், அதன் பிறகு எப்படியோ அடுத்தடுத்த படங்கள். இது போலத்தான் மாசிலாமணி வந்தது, அதன் பிறகு வல்லினம் வந்தது. சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்புவதில் எந்த பயநும் இல்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு பிறந்தது.
ஆர்ஜிகே 2 மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார். அதேபோல் எடுத்திருக்கிறார். நான் இதுவரை நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது . இப்படத்தில் பல பேர் நடித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இயக்குநர் ஆர்ஜிகே நம்பிக்கையை விடவில்லை .அவர் என்னை நம்பினார் ,நான் அவரை நம்பினேன் .அதுபோல தயாரிப்பாளரும் எந்தஒரு குறையும் வைக்கவில்லை.
என்னுடைய லைஃப் என்னுடைய வழி, இதுதான் என்னுடைய கொள்கை. இப்படித்தான் நான் போய் கொண்டிருக்கிறேன் .
நான் என்னென்னவெல்லாமோ கற்பனை செய்தேன். நான் எப்போதும் நல்ல நேரம் வரும் என்று காத்திருப்பதில்லை எல்லாம் நேரமும் நல்ல நேரம் தான் என்று நினைக்கிறேன். நான் நினைத்துப் பார்க்கிறேன் அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்ள போகிறோம் என்பதுதான் முக்கியம். எப்போதும் நான் என்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன்.
சினிமாவில் விமர்சனம் தேவையில்லை என்பது அல்ல ,அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சினிமா நூறாண்டு கண்டு விட்டது. இதை நம்பி நிறைய பேர் இருக்கிறார்கள். இங்கே யாரும் பர்பெக்ட் இல்லை. எல்லோரிடமும் குறைகள் இருக்கிறது. விமர்சனம் செய்கிறோம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள். ஆகஸ்ட் 2 தேதி என் மகளது பிறந்த நாள். அன்று இந்தப் படம் வெளியாகிறது கூடுதல் சந்தோஷம் ” என்றார்.
இவ்விழாவில்,படத்தைத் தயாரித்துள்ள டத்தோ. பா. சுபாஸ்கரன், கதை நாயகி அர்த்தனா பினு,இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன்,பாய்ஸ் மணிகண்டன், வாழ்த்துவதற்கு வருகை தந்த சாந்தனு, ஜெகன் ,இந்த படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் யுவராஜ், இசையமைப்பாளர் அருண் N.V ,ஒளிப்பதிவாளர் N .S .சதீஷ்குமார், எடிட்டர் தமிழ்குமரன் ,பாடகர் அந்தோணி தாஸ், கலை இயக்குநர் ஏழுமலை ஆதிகேசவன், ,இணைத் தயாரிப்பாளர் கோபிநாத் நபராஜன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.முன்னதாகத் தயாரிப்பாளர் டத்தோ பா. சுபாஸ்கரன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here